சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட தலைமை நிதி அதிகாரிகளுக்கு (CFO) இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மொத்தம் 18 வகையான விருதுகள் 3 பிரிவுகளாக வழங்கப்பட்டன. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டல உறுப்பினரும், நடுவருமான விஜய் குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை சிறப்பாக கையாளும் தலைமை நிதி அதிகாரிக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
குறிப்பாக, கரோனா காலத்தில் நிறுவனங்கள் பல இன்னல்களை சந்தித்ததாகவும், அப்போது சிறப்பாக நிதி மேலாண்மையை கையாண்ட சிறந்த நபர்களுக்கு இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும், இந்த நிகழ்ச்சி 2ஆம் ஆண்டாக நடைபெறுகிறது எனத் தகவல் அளித்த அவர், விரைவில் வழங்குவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதையும் கூறினார். அது, திறமையான நிதி மேலாண்மையை கௌரவிக்கும் வகையிலும், இதன் மூலம் பலரை ஊக்குவிப்பதற்காகவும் விரைவில் வழங்கப்படுகிறது என்றார்.