சென்னை: தற்போது மாறியுள்ள உணவுப் பழக்க வழக்கம் காரணமாகவும் இளம் பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது எனவும் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிலையத்தின் புற்றுநோய் பிரிவு உதவி பேராசிரியர் மருத்துவர் கவிதா சுகுமாரன் தெரிவித்தார்.
ஈ டிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருகிறது. இதில் மார்பக புற்றுநோய் உலக அளவிலும் தற்போது அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் புற்றுநோய் தற்போது உலகளவில் குறைந்து கொண்டு வருவது நல்ல அறிகுறியாக இருக்கிறது. இந்த இரண்டு வகை புற்று நோய்க்குக் குறித்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியமாகும்.
HBV வைரஸ்: கருப்பை வாய்ப் புற்றுநோய் HBV என்ற வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படும். உடல் உறவின் போதுகூட இந்த வைரஸ் தொற்று பெண்களுக்கு வர வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளவர்களுக்கு அந்த வைரஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும் பெண் உடம்பிற்குள் சென்ற HBV வைரஸ் ஒரு செல்லில் அமர்ந்து உடலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அது உடல் பலவீனம் அடையும் பொழுது, புற்று நோயாக அறிகுறி காண்பிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.
பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அது புற்றுநோயாக மாறி இரண்டு அல்லது மூன்றாவது நிலையை அடையும் பொழுது தான் சிகிச்சை பெறுவதற்கே வருகின்றனர். இந்த நிலையில் வரும்பொழுது சிகிச்சை அளித்தாலும் அதன் பலன் அதிக அளவில் இருப்பதில்லை.
HBV தடுப்பூசி:கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு நல்ல நோய் என கூறலாம். காரணம், இளம் வயதினருக்கு வருவதில்லை. மேலும், நோய்த் தொற்றின் மூலமாக மட்டுமே வருகிறது. இதனைத் தடுப்பதற்கு HBV தடுப்பூசிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் வழங்குகின்றன.
மேலும், பள்ளி மாணவிகளுக்கும் HBV வைரஸ் தடுப்பூசி போடலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. HBV தடுப்பூசி ஒன்பது வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயது வரை பெண்களுக்குக் கொடுக்கலாம். உடலுறவு கொள்வதற்கு முன்னர் இந்த தடுப்பூசியைக் கொடுக்க வேண்டும்.
பரிசோதனை: தடுப்பூசி போடாதவர்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் HBV வைரஸ் இருக்கிறதா என்பதை புற நோயாளிகள் பிரிவில் ஐந்து நிமிடத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த பரிசோதனை ஐந்தாண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்திலும் இந்த பரிசோதனை வசதி உள்ளது.
நாம் சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவற்றிற்குப் பரிசோதனை செய்து கொள்வது போல் தற்காத்துக் கொள்வதற்கு HBV பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து பரிசோதனை செய்யும் பொழுது அதில் சிறிய மாற்றங்கள் தெரிந்தாலும் அறிகுறியைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
பெண்களிடம் உள்ள விழிப்புணர்வு குறைவு அழைத்து வருவதற்கு ஆள் இல்லாமல் வெளியே சொல்வதற்குத் தயக்கம் போன்ற காரணங்களால் கால தாமதமாக வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிரமமாக உள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் நிலை இரண்டு அல்லது மூன்றில் வந்தாலும் அவர்கள் முழு சிகிச்சையும் எடுக்க வேண்டும் அவ்வாறு எடுக்காமல் பாதியில் விட்டுச் செல்கின்றனர் இதனால் அவர்களை முழுவதும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.