சென்னை : தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க உத்தேசித்திருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பள்ளிகளைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் முன்னதாகப் பேசிய அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி, ”12ஆம் வகுப்பு ஆகஸ்ட் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்துவதற்கு மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வை எந்தவித பாதிப்புகளும் இன்றி நடத்துவதற்கு தேர்வர்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்ட நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை குறித்து ஆலோசனைகளை இக்கூட்டத்தில் வழங்குகின்றனர். மேலும், இன்று மாலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை வழங்கவுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை