டெல்லி: இதற்கான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவட்ஷவா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை செயலாளரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான சி.சமயமூர்த்தி தலைமை வகித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை இயக்குநர் ராமன் கூறுகையில், “வறட்சியை மிக விரைவில் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு வறட்சியை கண்காணிப்பது முன்னதாகவே என்றாலும், வறட்சி மேலாண்மையின் முக்கியக் கூறுகளையும் தமிழ்நாடு அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
வர இருக்கக் கூடிய தென்மேற்கு பருவமழை சரியாக பொழியவில்லை என்றால், அதனால் ஏற்படக் கூடிய வறட்சியை எதிர்கொள்வதற்கு மாநில அரசு தயார் நிலையில் இருப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் நிலவ உள்ள மழைப்பொழிவு, அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் சேமிப்பு, பயிர் சாகுபடி மற்றும் வறட்சியைத் தணிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய திட்டத்தின் நிலையை வேளாண்மை ஆணையர் எல்.சுப்பிரமணியன் எடுத்துரைத்தார்.
மேலும், 10 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வறட்சி நிவாரணத் திட்ட வரைவு தயாரிப்பதற்காக ஏற்கனவே இரண்டு கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், அதன்படி வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய 23 முக்கிய மாவட்டங்கள் உள்பட 116 தொகுதிகளுடன் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.