சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குச் சென்னை மெரினா கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 134 அடி உயரத்துக்குப் பிரமாண்ட 'பேனா நினைவுச் சின்னம்' அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்குப் பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாகப் பொதுமக்கள் கடல் மேல் நடந்துச் சென்று பேனா நினைவு சின்னத்தைப் பார்வையிடும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்திருந்தது. அதோடு, கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்.17-ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனிடயே பேனா சின்னத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு 15 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதில், ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது. பேரிடர் மற்றும் போக்குவரத்து மேலாண்மை திட்டம் உள்ளிட்ட சில ஆவணங்களை மீண்டும் புதிதாக தயாரிக்க வேண்டும். ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் அனுமதி திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நினைவுச் சின்னம் அமைப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க போதுமான ஆய்வுகள், தரவுகளின்றி தயாரிக்கபப்ட்ட EIA வை பரிசீலித்து யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம்" என தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: K Annamalai: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. அண்ணாமலைக்கு வந்த புதிய சோதனை!