சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சென்னை ஐஐடியின் மாணவர் அமைப்பான புத்தாக்க மையம் (Centre for Innovation - CFI), ஐஐடி வளாகத்தில் இன்று (மார்ச் 12) வருடாந்திர திறந்தவெளி அரங்கு நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த வகையில், 3டி பிரிண்டிங், வானியல், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி, ஹைப்பர்லூப் உள்ளிட்ட தொழில்நுட்பம் மூலம் பல்வேறு துறைகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளின் கண்காட்சியை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவொரு நாடும் தொழில்நுட்பத்தில் வல்லரசாக வேண்டுமெனில் அதற்கு தொழில்முனைவும், புத்தாக்கமும் மிக அவசியமாகும். சென்னை ஐஐடி தனது புத்தாக்க மையத்தின் மூலம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐஐடி மாணவர்கள் தங்களின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்து பலமுறை செயல்முறை விளக்கங்களை செய்து காட்டி, பின்னர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றனர். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 2 மடங்கு அதிகளவில் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
வரும் ஆண்டுகளில் கண்டுபிடிப்புகள் மேலும் அதிகரிக்கும். மாணவர்கள் தொழில் முனைவோர்களாக வளர வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகள் வருவதற்குள் அதிகளவில் கண்டுபிடிப்புகளை எட்ட வேண்டும். மாணவர்களால் உருவாக்கப்பட்ட 77 தொழில்நுட்பத் திட்டங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதில் 800 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி மாணவர்களே புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடியில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி வரும் ஆண்டுகளில் மற்ற கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் சென்னை ஐஐடியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளோம். பிறக் கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளை முழுமையாக செயல்படுத்த ஐஐடியின் ஆராய்ச்சி மையத்தினை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு, கண்டுபிடிப்புகளை வடிவமைக்க உதவிட தயராக உள்ளோம். கழிநீர் தொட்டிகளில் கழிவுகளை சுத்தம் செய்யும் ரோபோ கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் விலை 18 முதல் 20 லட்சம் ரூபாய் விலை மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தேவை அதிகமானால் உற்பத்தி செலவு குறையும். 18 வாகனங்கள் தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பஞ்சாயத்துக்களில் கேட்டால் வழங்கப்படும். தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்களும் சில இயந்திரங்களை செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆள் இல்லாத கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை ஐஐடி வளாகத்தில் பயன்படுத்த உள்ளோம். ஆனால், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது.
அதாவது போக்குவரத்து, சாலை மேம்பாடுகள் அதிகம் வளர வேண்டியுள்ளது. அதனால், தற்பொழுது ஐஐடியில் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. பறக்கும் கார் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சோலார் மின் உற்பத்தி மூலம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அதிவேக கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்முலா பந்தயத்தில் பங்கேற்கவும் உள்ளது. யார் கண்டுபிடித்தாலும் தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து சென்னை ஐஐடியில் தெரியப்படுத்தினால், அதனை மேலும் வடிவமைக்கத் தேவையான உதவிகளை செய்து தயராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்தாண்டு கண்காட்சியில் மின்சக்தியில் இயங்கும் ஃபார்முலா பந்தயக் கார், முற்றிலும் சூரியசக்தியில் இயங்கும் மின்சார வாகனம், உண்மையான மீனின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் பயோமிமெடிக் ரோபோ மீன், கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில், அதன் மேற்பரப்பில் உள்ள குப்பைகளை முற்றிலும் களையும் தானியங்கி கடற்கரை தூய்மைப்படுத்தும் ரோபோ, அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் சக்தி, வெப்பநிலை உள்ளிட்ட உணர்வுகளை அளிக்கும் கையுறை, உற்பத்தி செய்யப்பட்ட பிஎல்ஏ இழைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துகள்களை நேரடியாகப் பயன்படுத்தும் 3டி பிரிண்டர், சென்னை ஐஐடியில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் அமைப்புக்கான சமூக செயலி ஏஐ டிஜே (செயற்கை நுண்ணறிவு சார்ந்த இசை வடிவ செயலி) உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
முற்றிலும் சூரியசக்தியில் இயங்கும் மின்சார வாகனத்தை அக்னிராத் குழுவினர் தயார் வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து அதன் வடிவமைப்பு குழுவின் உறுப்பினர் கூறுகையில், முற்றிலும் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளது. 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும். முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் போது காரின் மேல் பொருத்தப்படும் சூரிய ஒளித் தகட்டினால் எரிசக்தியை பெற்று இயங்கும் எனத் தெரிவித்தனர்.
விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மருந்து தெளிப்பதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ள குழுவின் மாணவர் சூர்யா கூறும்போது, விவசாயத்திற்கான கண்டுடிப்பிடிப்பு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கான கருவியை கண்டுபிடித்துள்ளோம். விவசாயிகள் முதுகில் 20 கிலோ மருந்தை தூக்கிக் கொண்டு அடிக்கும் போது முதுகு வலி வரும். அதனை தவிர்ப்பதற்காக எளிய முறையில் வாகனத்தில் வைத்து, அதன் சக்கரம் சுற்றும் போது மருந்து தெளிக்கும் வகையில் கண்டு பிடித்துள்ளோம். இதனை மேலும் எளிதாக மாற்றி வடிவமைக்க உள்ளோம். அதன் பின்னர் விவசாய நிலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:புத்துயிர் பெறும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் - நவீனமயமாக்கும் பணிகள் தீவிரம்