இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கரன்சி சென்னை: இலங்கையில் இருந்து விமானத்தில், சென்னைக்கு மிகப்பெரிய அளவில் கடத்தல் தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் 15 இரவு வந்தனர். பின், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து சென்னை வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த, பயணிகள் விமானம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஒருவர் கடத்தல் தங்கத்துடன் ஏற்கனவே சென்னை வந்து, விமான நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற கூடுதல் தகவல் கிடைத்தது. மேலும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய பயணி, விமான நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில், சென்னை நகருக்குள் சென்றுவிட்டார் என்றும் தெரியவந்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய பயணியின், செல்போன் சிக்னலை ஆய்வு செய்து கண்காணித்த போது, சென்னை மண்ணடியில் உள்ள ஒரு விடுதியைக் காட்டியது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் தனிப்படை அதிகாரிகள், விமான நிலையத்திலிருந்து சென்னை நகருக்குள் விரைந்து வந்து, மண்ணடியில் உள்ள குறிப்பிட்ட அந்த விடுதியை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.
அங்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய பயணி தங்கியிருந்த அறையைக் கண்டுபிடித்து சோதித்த போது, அந்த அறையில் இருந்து 2.5 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகள் கிடைத்தன. அதை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.3 கோடி. மேலும் அந்த அறையை சோதனை நடத்திய போது, ரூபாய் 63 லட்சம் இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணம் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள் மற்றும் ரூபாய் 63 லட்சம் மதிப்புடைய கரன்சிகள் ஆகியவற்றை, சென்னை தியாகராய நகரில் உள்ள, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு மத்திய வருவாய் புலனாய்வுத் அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்தல் ஆசாமி தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த ரூபாய் 63 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு, இந்தியப் பணம் எப்படி இவருக்கு கிடைத்தது?, இந்த தங்கக் கட்டிகளை சென்னையில் யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார்?, இந்தப் பணத்தை இவரிடம் கொடுத்தது யார்?, மேலும் சென்னை விமான நிலைய சுங்கச் சோதனையில் இருந்து எப்படி தப்பி வெளியே சென்றார்? என்ற கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு; 13 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்!