மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சிபெட்டில் மாணவர் விடுதியை திறந்து வைக்க வந்துள்ளதாகவும், 91 அறைகள் கொண்ட இந்த விடுதி 950 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதுவரை 3.5 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்று நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும், இன்னும் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ரிசர்வ் வங்கி விவகாரம் குறித்து ராகுல் காந்தியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தையும் மஞ்சளாக தெரியும் கண்களோடு பார்க்கக் கூடாது என்றும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு என உலக வங்கி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட வேகமாக இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது என்றார்.
ஒருபுறம் வங்கிகள் கடன் தர மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார் என்றும் மறுபுறம் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதையும் குறை சொல்கிறார் எனவும் சாடினார்.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் அவரது வாழ்க்கையில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்ததே இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.