சென்னை:வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் சூழந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 5 ஆயிரத்து 60 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று சென்ன்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.
அவர்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பின்னர் அமைச்சர் ராஜ் நாத் சிங் புயல் தாக்கத்தால் சென்னையில் அடைந்த பாதிப்புகளை ஹெலிகாப்ட்டர் மூலம் பார்வையிட்டார். ஆய்விற்கு பின்னர் தலைமைச் செயலகம் வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) முதலமைச்சர் ஸ்டாலின், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளித்தார். அப்போது நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இணை அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: மழை நின்று மூன்று நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வெளியேறாத வெள்ள நீர்!