தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிடக் கூடாது - ராமதாஸ் எதிர்ப்பு! - நிதிநிலை அறிக்கை 2020

சென்னை: புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

PMK Ramadas statement
PMK Ramadas statement

By

Published : Feb 2, 2020, 7:43 PM IST

மத்திய அரசு தற்போது கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையை வெளியிடக் கூடாது என பாமக நிறுவனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன், கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

அந்த அறிவிப்பானது புதிய தேசியக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பதுதான். மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது.

மேலும், இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்தாண்டு மே மாதம் 31ஆம் தேதி வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தாக்கல் செய்தனர். அன்றே அந்த அறிக்கை பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரைவுக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தொடக்கக் கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி அளவில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற ஒரு சில நல்ல திட்டங்கள் வரைவு தேசியக் கொள்கையில் இடம் பெற்றுள்ள போதிலும், மீதமுள்ள பெரும்பான்மையான திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.

குறிப்பாக மும்மொழிக் கொள்கை, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவது, உயர்கல்விக்கான மானியத்தை குறைப்பது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் கல்வியில் சமூகநீதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என வரைவுக் கல்விக் கொள்கையில் எதிர்மறையான அம்சங்கள் ஏராளமாக உள்ளன. சுருக்கமாகக் கூறினால், அண்மைக் காலங்களில் மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்த கொள்கைகளில் வரைவுக் கல்விக் கொள்கை குறிப்பிடத்தக்கதாகும்.

வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள எதிர்மறையான அம்சங்களை நீக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அதை உறுதிசெய்ய வேண்டியது மாணவர் நலனில் அக்கறையுள்ள கட்சிகளின் பணியாகும். வரைவுக் கொள்கை மீதான கருத்துகளையும், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளையும் பாமக வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சார்பிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு அவற்றின் தொகுப்பு மத்திய அரசிடம் தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீது எவ்வளவு கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன; அவற்றில் எத்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

அதனடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும். அதில் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாரம்பரிய நீதிமன்றங்களைப் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details