தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்! - pm narendra modi

Minister Nirmala Sitharaman: 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலான 17 முக்கிய நலத்திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்துடன் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

central-government-has-provided-rs-7-lakh-crore-to-tamil-nadu-in-the-last-10-years-nirmala-seetharaman-said
தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 9:21 PM IST

Updated : Jan 4, 2024, 9:30 PM IST

தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்!

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, "பிரதமரின் கிராம சாலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களால் நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி வழங்கி வருகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனத்துடன் செயல்படுகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, நடைபெறும் முகாம்களில், மத்திய அரசின் இந்த திட்டங்களில் இதுவரை சேராத மக்கள், அவற்றில் சேர்ந்து பயன்பெறும் வகையில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பல்வேறு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி: பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு 6.8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 57 லட்சம் மற்றும் நகரப்புறங்களில் 5.23 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. அதில் சென்னையில் மட்டும் 6,751 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சென்னையில் 6,340 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் மாநிலம் முழுவதும் 37 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 32,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் நான்காக்கும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்கு எதுவுமின்றி 3.64 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தமட்டில் 25.7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். மக்கள் வங்கித் திட்டம் எனப்படும் ஜன்-தன் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பேருக்கு இருப்புத் தொகை ஏதுவும் இல்லாமல் வங்கிக் கணக்குகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 58 சதவீதம் பேர் பெண்கள்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதமின்றி 2.67 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு 2,200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 3.6 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்வநிதி திட்டத்தின் கீழ், பயனாளிகளின் விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார். அப்போது ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றதில் 67 சதவீதம் பேர் பெண்கள். அதில் 32 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். அதேபோல் 18 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் கோடி நிதி: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 கி.மீ தூரத்திற்குக் கிழக்கு கடற்கரைச் சாலை ரூ.3,000 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் திட்டத்தைப் பொருத்தவரை இந்த ரயிலுக்கான அனைத்துப் பெட்டிகளும் சென்னை பெரம்பூர் இணைப்பு ரயில் பெட்டி (ஐசிஎப்) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 4 வழித்தடங்களில் இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரிப்பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் 2.8 லட்சம் கோடி ரூபாயும், மானியங்கள் மற்றும் உதவித் தொகை அடிப்படையில் அதே காலகட்டத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கிப்பட்டுள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் மூலம் தமிழ்நாடு வெறும் 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்குக் கொடுத்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜிஎஸ்டி: ஜிஎஸ்டி வரியைப் பொறுத்தவரை, மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 36,353 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியை பொறுத்தவரை 41 சதவீதம் மாநிலத்திற்கே ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்த 37,965 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த 11,116 கோடி ரூபாயும், கிராம சாலைகள் திட்டத்திற்கு 3,637 கோடி ரூபாயும், வீட்டு வசதி திட்டத்திற்கு 4,739 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டப்பயனாளிகளின் அனுபவங்கள் குறித்து நிதியமைச்சர் கேட்டறிந்தார். புதிய திட்டப்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் கடன்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated : Jan 4, 2024, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details