சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்தியில் டப் செய்து வெளியிட்டார். ஆனால் அப்போது மும்பையில் உள்ள தணிக்கை குழு படத்தை வெளியிடவும், தணிக்கை செய்யவும் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டுக் குற்றம்சாட்டி இருந்தார்.
இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது. விஷால் நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ்ப் படங்களை இந்தியில் வெளியிடத் தணிக்கை வாங்கும் முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ்ப் படங்களுக்குத் தணிக்கை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை பெற்றுக் கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.