சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ள நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தர்மராஜ், ஒய்.பாலாஜி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், அமலாக்கத் துறையும் தங்களது தரப்பு விசாரணையை நடத்த அனுமதி அளித்து மே 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.