தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவசரமாக போன் பேச வேண்டும்.. ஆயிரம் செல்போன்கள் திருட்டு.. பலே திருடன் பல்சர் பாபு சிக்கியது எப்படி? - Pulsar Babu arrested in Chennai

2010 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பில் ஈடுபட்டு 4 முறை குண்டாஸில் சிறைக்கு சென்று வெளியே வந்து மீண்டும் வழிப்பறி கொள்ளையனாக மாறிய பல்சர் பாபுவை சென்னை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 29, 2023, 8:20 AM IST

Updated : Mar 29, 2023, 10:20 AM IST

அவசரமாக போன் பேச வேண்டும்.. ஆயிரம் செல்போன்கள் திருட்டு.. பலே திருடன் பல்சர் பாபு சென்னையில் கைது

சென்னை:ஒரு வாரத்திற்கு முன்பாக அடையாறு காந்தி நகர்ப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கால்களும் உடைந்து நடக்கமுடியாத நிலையிலிருந்த நபர் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் அவசரமாக போன் பேச வேண்டும் எனவும் 'தனது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது' எனவும் கூறி இளைஞரின் செல்போனை வாங்கி இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் செல்போனுடன் தப்பிச் சென்றார். இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அன்றிரவே இதேபோல, இருசக்கர வாகனத்தில் கால்கள் உடைந்து நடக்கமுடியாத நிலையிலிருந்த நபர் தனது செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாக இந்திரா நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு தினங்களில் நான்கு இளைஞர்கள் இதேபோல, அடையாறு காவல் நிலையம் மற்றும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நான்கு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், போலீசார் விசாரணையில் தண்டையார்பேட்டை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல செல்போன் திருடனான பல்சர் பாபு(33) என்பது தெரியவந்தது. காசிமேட்டில் பெரிய தாதாவாக இருந்த பல்சர் பாபு, கடந்த 2005ஆம் ஆண்டு அவரது எதிரிகளால் ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில், இவரது இரண்டு கால்களும் உடைந்து சிகிச்சைக்குப் பின் சரியாக நடக்க முடியாத நிலையில் பிழைப்புக்காகக் கொள்ளையனாக மாறியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, பல்சர் ரக பைக்குக்களை திருடி அந்த வாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவதை பாபு வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இரண்டு கால்களும் உடைந்து சரிவர நடக்க முடியாமல் இருக்கும் பல்சர் பாபு, பல்சர் இருசக்கர வாகனத்தை மட்டுமே ஓட்டுவதாலும், பாண்டிச்சேரியில் இரவு நேரங்களில் நடக்கும் சிக்னல் ரேசில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பதும், மேலும் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபடுவதால் பாபுவுக்கு போலீசார் மத்தியில் பல்சர் பாபு என்ற பட்ட பெயர் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பல்சர் பாபுவை பிடிப்பதற்கு அடையாறு உதவி ஆணையர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் தலைமறைவாக இருந்த பல்சர் பாபுவை அடையாறு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது நேற்று (மார்ச்.28) செய்தனர்.

கைது செய்யப்பட்ட பல்சர் பாபுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்ததும், இங்கு போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சென்னையைச் சேர்ந்த இவர் திருப்பதியில் அறை எடுத்து தங்கி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்னை வந்து செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இதற்காக ஆந்திராவில் இருசக்கர வாகனத்தை திருடி போலி பதிவெண் பலகையை மாற்றிக்கொண்டு சுற்றி வந்ததும், சென்னை முழுவதும் கவனத்தை திசைத்திருப்பி செல்போன்களை திருடி அதனை பர்மா பஜாரில் விற்பனை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், மீண்டும் திருப்பதி சென்று அங்கேயே முகாமிட்டு இருப்பதையும் இவர் வாடிக்கையாக வைத்துள்ளார். செல்போன் விற்று வரும் பணத்தை வைத்துக்கொண்டு உல்லாசமாக இருந்துவிட்டு பணம் காலியான பின்பு சென்னைக்கு வந்து மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

4 முறை பாபு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதும், மேலும் சென்னையில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் புறநகர் காவல் நிலையங்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் பாபு மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்னை முழுவதும் சுற்றித்திரிந்து தனியாக செல்லும் இளைஞர்களிடத்தில் அவசரம் எனக் கூறி, செல்போன் பறிப்பதை வாடிக்கையாக பாபு செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இவ்வாறு வழிப்பறி செய்த செல்போன்களை பர்மா பஜாரில் உள்ள ஆனந்த் என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதி அடுத்த சத்தியமேடு பகுதியில் லாட்ஜ் எடுத்து மது, பெண்கள் என உல்லாசமாக இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், பல்சர் பாபு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த ஆறு மாதங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட செல்போன் வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பல்சர் பாபுவிடமிருந்து செல்போன்களை வாங்கிய பர்மா பஜாரை சேர்ந்த ஆனந்த் என்பவரையும் அடையாறு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 56 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மற்ற செல்போன்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயியாக இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளரான EPS - கடந்து வந்த பாதையும் கண்முன் நிற்கும் சவால்களும்!

Last Updated : Mar 29, 2023, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details