தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் திருடப்படும் செல்ஃபோன்கள்: 9 பேர் கைது - செல்ஃபோன் திருட்டு

சென்னை: சென்னையில் திருடப்படும் செல்ஃபோன்களை ஐ.எம். இ. ஐ எண்களை மாற்றி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்துவருவது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக ஒன்பது பேர் கொண்ட கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது.

செல்
செல்

By

Published : Oct 22, 2020, 1:40 PM IST

சென்னையில் நாளுக்கு நாள் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.குறிப்பாக இருசக்கர வாகனத்தில் இடிப்பது போன்று சென்று பொதுமக்களிடம் செல்ஃஃபோனை பறித்து செல்வதும், நடந்து செல்லும்போது பறிப்பதும்,கத்தியால் தாக்கி பறிப்பதும் தொடர்கிறது.

இதனால் செல்ஃபோன் பறிப்பு சம்பவத்தை தடுப்பதற்காக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் காவல் துறையின் உதவியோடு செல்ஃபோன் பறிப்பு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்படும் செல்ஃபோனை மூர் மார்க்கெட், பர்மா பஜார்,பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் விற்றுவருவது கண்டுபிடிக்கபட்டுள்ளது. அவர்கள் செல்ஃபோனின் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றி புதியதாக உருவாக்கி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் விற்று வருவதும் தெரியவந்தது.

இதனால் பர்மா பஜார்,மூர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள செல்ஃபோன் கடைக்கு அடிக்கடி செல்லும் நபரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த எண்களை வைத்து அவரது முகவரியை கண்டுபிடித்த போலீசார் விவரங்களை சேகரித்து மூன்று நாள்களாக அந்த நபரை பின் தொடர்ந்துள்ளனர்.

அந்த நபர் அதிகாலை 5 மணியளவில் பர்மா பஜார் சுரங்க பாதை அருகே வந்து அங்கு வரும் நபரிடம் செல்ஃபோனை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தும்போது தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மருது என்பதும் இவர் விற்பனை செய்து வந்தது அனைத்துமே திருடிய செல்ஃபோன்கள் என்பதும் தெரியவந்தது.

மது மற்றும் கஞ்சா போதைகளில் வழிப்பறியில் ஈடுபடும் திருடர்களிடம் இருந்து 500 முதல் 2000 ரூபாய்வரை வாங்கி வந்து 2500 முதல் 3000 ரூபாய்வரை விற்பனை செய்து வரும் இடைத்தரகராக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

செல்ஃபோன் வாங்க வருபவர் யார் என்பது குறித்த தகவல் தெரியாது எனவும் செல்ஃபோனின் தரத்தை பொறுத்து பணம் வழங்குவார்கள் எனவும் அவர் காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.

அவரை வைத்து இதே போல் திருடிய செல்ஃபோன்களை விற்கும் இடைத்தரகர்களான மண்ணடியை சேர்ந்த அந்தோணிசாமி, புகழேந்தி, வியாசர்பாடியை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட மூன்று இடைத்தரகர்களை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பர்மா பஜாரில் திருடிய செல்ஃபோனை வாங்கி விற்கும் செல்ஃபோன் கடை நடத்தி வரும் எம்கேபி நகரை சேர்ந்த பாலமுருகன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பர்மா பஜாரில் பொதுவாகவே 10 மணியளவில் மட்டுமே செல்ஃபோன் கடைகள் திறக்கபடும். ஆனால் திருடிய செல்ஃபோனை விற்பனை செய்பவர்கள் மட்டுமே அதிகாலை கடையை திறந்து விற்பனை நடத்தி வந்துள்ளனர். இடைத்தரகர்கள் மூலம் செல்ஃபோன்களை வாங்கி ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றி புத்தம்புது செல்ஃபோன்களாக மாற்றி பில் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதற்காக உள்ள ஏஜெண்டுகள் மூலமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் செல்ஃபோனை மொத்தமாக விற்பனை செய்து வருவதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த செல்ஃபோன் கடைக்காரர்களுக்கு தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு செல்ஃபோன்களை கொடுத்து வந்த ராயபுரத்தை சேர்ந்த பிரவீன்,கோயம்பேட்டை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த விக்னேஷ் பிரபு(37) என மூவரை கைது செய்தனர். செல்ஃபோன் கொள்ளை கும்பலிடம் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்பிலான 50 செல்ஃபோன்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேரையும் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இதேபோல பல செல்ஃபோன் கொள்ளை கும்பல் சிக்க உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details