போதையில் தாயை தாக்கியவரை சரமாரியாக அடித்த மகன்: நடந்தது என்ன? சென்னை: மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் மூர்த்தி. இவரது நண்பர் இறந்த காரணத்தால் சமீப காலமாக அதிகளவு மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று மதியம் முண்டக்கண்ணி அம்மன் கோயில் அருகே இருக்கும் கடைகளை மூடுமாறு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு கடை வைத்திருக்கும் அம்பிகா என்பவரது கடையையும் மூடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு தகராறில் ஈடுபடும் போது அம்பிகாவை கன்னத்தில் அறைந்துள்ளார். அதன் பின் சற்று தூரத்திலிருந்து தனது தாயான அம்பிகாவை தாக்கியதை பார்த்த அவரது மகன் குமார், தாய்ப் பாசத்தில் அம்மாவை அடித்த மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
குமார் தாக்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் மூர்த்திக்கு அதிக ரத்தம் வந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மூர்த்தியை குமார் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. தன்னை அடித்தவரை மகன் சரமாரியாக தாக்கும் போது கூட கன்னத்தில் அடி வாங்கிய தாய் அடிக்க வேண்டாம் என்ற காட்சியும் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தாய் பாசத்தில் அம்மாவை அடித்தவரை சரமாரியாக மகன் தாக்கி இருந்தாலும், சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் தற்போது குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு இசை கல்லூரிகளில் தவில், நாதஸ்வரம் பிரிவுகளில் பட்டப்படிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு