சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். ரமேஷ் நேற்றிரவு குடித்துவிட்டு பெரியார் சாலையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ரமேஷிடம், ”யாருடா நீ குடிபோதையில் இங்க எதுக்கு நிக்கிற” என ஒருமையில் பேசி, நான் யார் தெரியுமா எனக்கூறி திடீரென ரமேஷின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். மேலும் ரமேஷை எட்டி உதைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த ரமேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரமேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.