சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா மற்றும் 26 நாடுகளில் உள்ள 28,471 பள்ளிகளில் இருந்து 21,86,485 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 7,241 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இன்று (மே 12) தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது, 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்வாகியுள்ளனர்.
திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, கவுகாத்தி மண்டலத்தில் 76.90% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவிகள் 94.25 சதவீதம் பேரும், மாணவர்கள் 92.27 சதவீதம் பேரும் தேர்ச்சியாகி உள்ளனர். https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். செல்போன் எஸ்எம்ஸ் மூலமும் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் https://results.cbse.nic.in/, http://results.nic.in/, http://resluts.digilocker.gov.in, https://web.umang.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு 21 லட்சத்து 9 ஆயிரத்து 208 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 20 லட்சத்து 93 ஆயிரத்து 978 பேர் தேர்வு எழுதியதில், 19 லட்சத்து 76 ஆயிரத்து 668 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.40 சதவீதமாக இருந்ததது. ஆனால் கடந்த ஆண்டை விட 1.28 % தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.