தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய ஐடி அதிகாரிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ! - Income Tax Department

சென்னையில் உள்ள சொத்திற்கு சாதகமாக மதிப்பீட்டு ஆவணம் அளிப்பதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

லஞ்சம் வாங்கிய வருமானவரித் துறை அதிகாரிகள்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ!
லஞ்சம் வாங்கிய வருமானவரித் துறை அதிகாரிகள்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ!

By

Published : Jan 7, 2023, 4:14 PM IST

சென்னை: வானகரத்தைச் சேர்ந்த சுரேஷ் அருணகிரி என்பவர் தனது அண்ணாநகர் சொத்தை தேசிய இ-மதிப்பீட்டு மையத்தின் மூலம் மதிப்பீடு செய்வதற்கு அணுகியுள்ளார். டெல்லியில் உள்ள தேசிய இ-மதிப்பீட்டு மையத்தின் உத்தரவு அடிப்படையில், வருமான வரித்துறையில் உள்ள வருமான வரி மதிப்பீட்டுப் பிரிவின் மாவட்ட அதிகாரியை, சுரேஷின் அண்ணாநகர் சொத்தை மதிப்பீடு செய்து தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்ணாநகர் கிழக்கில் உள்ள போகன் வில்லா குடியிருப்பில் இருக்கும் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான சொத்து குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி பவனில் மத்திய பொதுப்பணித் துறையின் சூப்பரண்டண்ட் பொறியாளராக பணிபுரிந்து வரும் சஞ்சய் ஜிஞ்ச்ஹரே, கூடுதல் பொறுப்பாக வருமான வரித் துறையின் மதிப்பீட்டுப் பிரிவின் மாவட்ட மதிப்பீட்டு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்கான அதிகாரத்தைப் பெற்று, உதவி மதிப்பீட்டு அதிகாரியின் உதவியோடு செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் சுரேஷ் என்பவரின் அண்ணாநகர் சொத்தை மதிப்பீடு செய்ய பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில், உதவி மதிப்பீட்டு அதிகாரி மஞ்சுநாதன் என்பவர் மதிப்பீடு செய்ய சென்றுள்ளார். அவர் மதிப்பீடு செய்த போது ரூ.26 லட்சம் வேறுபாடு இருந்ததால், இது தொடர்பாகத் தனது உயர் அதிகாரியான சஞ்சய் ஜிஞ்ஹரேவிற்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்துள்ளார்.

இதனிடையே மஞ்சுநாதன் சொத்தின் உரிமையாளரான சுரேஷிடம் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாகத் தெரிவித்த போது, சுரேஷ் தனது தணிக்கையாளரான சத்குரு தாஸ் என்பவரை அணுகுமாறு, மஞ்சுநாதனிடம் தெரிவித்துள்ளார். சொத்து மதிப்பீட்டுப் பிரச்சனையை சுரேஷுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிப்பதற்குத் தனது உயர் அதிகாரியான சஞ்சய் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் எனக் கூறி தரகர் போல் மஞ்சுனாதன் செயல்பட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மஞ்சுநாதன் மற்றும் சொத்தின் உரிமையாளர் சுரேஷ் அவரது தணிக்கையாளர் சத்குரு தாஸ் தொடர்ந்து பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளனர். அதன் பின் சொத்து உரிமையாளரான சுரேஷ் நேரடியாக மாவட்ட மதிப்பீட்டு அதிகாரியான சஞ்சயைச் சந்தித்தும் பேசியுள்ளார். சஞ்சய் மற்றும் மஞ்சுநாதன் இருவரும் சேர்ந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர். நேற்று (ஜன.6) சொத்து உரிமையாளரான சுரேஷ் மூன்றரை லட்சத்தை கவரில் வைத்து தயாராக வைத்திருந்ததாகவும், ஜமால் என்ற ஊழியர் மூலம் மத்திய வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகளுக்குக் கொடுத்ததாகவும் தெரியவந்தது.

இவ்வாறாக சொத்து மதிப்பீடு செய்வதற்கு வருமானவரித்துறை கீழ் செயல்படும் மாவட்ட மதிப்பீட்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர்பாகவும், இவர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பாகவும் சிபிஐக்கு தகவல் கிடைத்தது.சிபிஐ முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானதால் சஞ்சய், மஞ்சுநாதன் மற்றும் சொத்தின் உரிமையாளர் சுரேஷ் அவரது ஆடிட்டர் சத்குரு தாஸ் ஆகிய 4 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: தேனியில் பித்தளை குடம் மற்றும் தாம்பூலத்தில் பரதநாட்டியம்

ABOUT THE AUTHOR

...view details