கடந்த 2019ஆம் ஆண்டு விஏஓ, உள்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்குப் பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகில் உள்ள கீழக்கரையில் தேர்வு எழுதிய 99 பேர் ஒட்டுமொத்தமாக தேர்வு பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து திட்டமிட்டு இந்த மையத்தில் தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்கள் குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் 99 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, தேர்வு எழுத தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன், முன்னாள் டிஜிபியின் கார் டிரைவர் மற்றும் ஒரு எஸ்.ஐ., புரோக்கர்கள் துணையுடன் மோசடி நடந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோதுதான், மேலும் பல தேர்வுகளில் இதுபோல முறைகேட்டில் பல முறை ஈடுபட்டதும், அவர்களில் பலர் தற்போது பணியில் இருப்பதும் தெரியவந்தது.