சென்னை: விடியல் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "கடந்த 1993ஆம் ஆண்டு வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு - கர்நாடக அரசுகள் கூட்டு ஒப்பந்தத்தின்பேரில் சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்தது.
வீரப்பன் நடமாட்டமுள்ள மலையோரக் கிராம மக்களை சந்தேகத்தின்பேரில், பிடித்துச் சென்று பொய் வழக்குப் போடப்பட்டது.
அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்த சதாசிவா கமிட்டி அமைக்கப்பட்டது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 192 பேர் சாட்சியம் அளித்ததில், 89 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
நிவாரணம் கோரி வழக்கு
வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு, இரு மாநில அரசுகளால் தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த 10 கோடியில் இரு மாநில அரசுகளும் 2.80 கோடியை நிவாரணமாகக் கடந்த 2007ஆம் ஆண்டு கொடுத்தது.
ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மீதமுள்ள 7.20 கோடி ரூபாய் நிவாரணத்தை வழங்கவில்லை. எனவே, மீதமுள்ள நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு இதுகுறித்து இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:2 ஏடிஜிபிக்கள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்