ஹெல்மெட் அணியாத காவலரை தட்டி கேட்ட சமூக ஆர்வலர்; காவலர் மீது வழக்கு பதிவு சென்னை: புதிய ஆவடி சாலையில் காவலர் கிருஷ்ணகுமார் கடந்த அக்.7ம் தேதி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். இதைப் பார்த்த சமூக ஆர்வலர் காசிமாயன் காவலரிடம் ஹெல்மெட் அணியுமாறு கூறியதற்கு, காவலரை அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
சமூக ஆர்வலரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவலரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து காவலர் கிருஷ்ணகுமாருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் தன்னை ஆபாசமாக பேசி மிரட்டியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் காசிமாயன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் காசிமாயனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவலர் கிருஷ்ணகுமார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் ஐசிஎப்(ICF) போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் கிருஷ்ணகுமார் தற்போது தஞ்சாவூர் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் விசாரணை பெண் மீது துப்பாக்கிச்சூடு - நடுரோட்டில் நடந்த கொடூரம்