சென்னை:பாரிமுனை மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டடம் அமைந்திருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தை, கடந்த சில ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பரத் சந்திரன் என்பவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். இதனையடுத்து கட்டடத்தை புதுப்பிக்கும் பணியும், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 19) காலை வழக்கமான புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலை 10.15 மணியளவில் திடீரென நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டட விபத்தில் அருகே இருந்த ராஜசேகர், பார்த்திபன், அரசு, முகமது ஆரிப் ஆகிய நான்கு பேரும் காயம் அடைந்தனர். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பாரிமுனை, உயர் நீதிமன்றம் மற்றும் கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில், சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளை மாநகராட்சிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் மூலமாக உடைத்தும் அகற்றினர். முதலில் கட்டடத்தின் அருகில் காயமடைந்த நான்கு நபர்களை மீட்புத் துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கட்டடம் விழுந்ததில் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாநகரட்சி மேயர் ப்ரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தீயணைப்புத் துறையின் டிஜிபி அபாஸ் குமார் ஆகியோர் கட்டட விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களைக் கண்டறிய காவல் துறையின் 2 மோப்ப நாய்களும், தீயணைப்புத் துறையின் 5 நாய்களும் வரவழைக்கப்பட்டு, தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதேநேரம், கட்டடத்தின் கீழ் மாட்டிக் கொண்டவர்களை மீட்க Victim identification machine (a) under scan machine என்ற இயந்திரத்தைக் கொண்டு, எந்த பகுதியில் மாட்டியுள்ளனர் என்பதை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பார்த்தனர்.