தமிழ்நாட்டில் கரோனாவின் முதல் தொற்று உறுதியான பிப்ரவரி, மார்ச் மாதம் முதல் வெவ்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத் துறைச் செயலாளர், கரோனா பரவல் குறித்த செய்திகளை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்த காணொலியை மட்டும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில், வெளியிட்ட நபர் மீது பொது சுகாதாரத் துறை இயக்குநர், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் சுகாதாரத் துறைச் செயலாளர் குறித்து பதிவிட்ட பதிவை நீக்குமாறு எச்சரித்தது. மீறினால், இதையே காவல் துறையின் நோட்டீஸ் ஆக எடுத்துக் கொள்ளுமாறும் எச்சரித்தது.
சைபர் கிரைம் காவல் துறை தன்னை மிரட்டுவதாகக் கூறி, அந்தப் பதிவையும் ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்தும் அந்தப் பதிவு நீக்கப்படாததால் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், ஸ்ரீராம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகும் படியும் அவரை தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமல்லாது சென்னை மருத்துவக் கல்லூரி இருதயவியல் முதுகலை மாணவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மற்ற மாணவர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு, சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது பொய்யான செய்தி எனக் கூறி, அந்தப் பதிவை நீக்குமாறு சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கம் மூலம் எச்சரித்தனர். மேலும் இது போன்ற பதிவுகளையெல்லாம் தேடி, அதனை அகற்றும் பணியில் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையின் சில குறைகளை சுட்டிக்காட்டி பதிவிட்டாலே சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் பதிவை அகற்றுமாறு மிரட்டுவதாக, சமூக வலைதளத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.