தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மருத்துவர் மகள் மீது வழக்குப்பதிவு! - neet marks sheet change scam

சென்னை: மருத்துவக் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்த மருத்துவரின் மகள் மற்றும் அவரது தந்தை மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவர் மகள் மீது வழக்குப்பதிவு
மருத்துவர் மகள் மீது வழக்குப்பதிவு

By

Published : Dec 13, 2020, 10:25 PM IST

2019ஆம் ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த உதித்சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி காவலர்கள், மோசடியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர், ஏஜெண்டுகள் என கிட்டத்தட்ட 14 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18ஆம் தேதிலிருந்நு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக் ஷா என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவரது சான்றிதழ்களை சரிபார்த்த போது அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார் என தெரிய வந்தது. அவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் 610 எடுத்த ஹிர்த்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை நகலெடுத்து அதில் ஹர்த்திகாவின் புகைப்படத்தை நீக்கி தீக் ஷாவின் புகைப்படத்தை ஒட்டியதும் தெரியவந்தது.

ஹிர்த்திகாவின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள சீரியல் நம்பரை நீக்கி தீக் ஷாவின் சீரியல் நம்பரை அச்சிட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் செல்வராஜன் என்பவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை பெரியமேடு காவல்துறையினர் மாணவி திக் ஷா, அவரின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் 420- ஏமாற்றுதல், 419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464- தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465- பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468 ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை எனக் கூறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செல்வராஜன், மாணவியின் தீக் ஷாவின் சான்றிதழ்கள் ,மாணவி ஹிர்த்திகாவின் சான்றிதழ்கள், மகாலட்சுமி என்ற மாணவியின் சான்றிதழ்கள் ஆகியவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

வழக்கமாக நீட் தேர்வு எழுதி முடித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீட் ஆணையம் விதித்திருக்கிறது. தேர்வு எழுதிய மாணவியின் பிறந்தநாள் விவரங்கள், அவருடைய சீரியல் எண் விவரங்கள், அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் போன் எண்கள், மொபைல் போனுக்கு வரக்கூடிய ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால்தான் ஒரு மாணவி தான் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழை எடுக்க முடியும்

இந்நிலையில் தீக் ஷாவின் தந்தையால் எப்படி மற்றொரு மாணவி மதிப்பெண்ணை பட்டியலை எடுக்க முடிந்தது, யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலச்சந்திரன், அவருடைய மகள் தீக் ஷா ஆகிய இருவரையும் சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க பெரியமேடு காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details