சென்னை சாலிகிராமம் மசூதி கார்டன் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர், ரூபா (40). தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வரும் ரூபா குடும்பச்சூழல் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு நவ.9ஆம் தேதியன்று சமையல் வேலைக்காக துபாய்க்குச் சென்றார்.
அங்கு சரியான வேலை கிடைக்காததால் சென்னை திரும்ப நினைத்த ரூபா டிச.11ஆம் தேதியன்று சென்னை வருவதற்காக துபாய் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த நாகூரைச் சேர்ந்த அரிசி வியாபாரியும் அதிமுக பிரமுகருமான சையத் (46) என்பவர் ரூபாவிடம் 180 கிராம் (22.5 சவரன்) தங்க நகைகளை கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் தனது உறவினர்களிடம் கொடுத்து விடுமாறும், அதற்கு 10 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பிய ரூபா, தங்க நகைகளை வாங்கிக் கொண்டு துபாய் விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்து அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரை வெளியே அழைத்து வந்ததுடன், அவரிடம் இருந்த 180 கிராம் தங்க நகைகள், சிம்கார்டு, ஆகியவற்றை வாங்கிக் கொண்டு 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றனர். பின்னர் ரூபா செல்வதற்குள் விமானம் புறப்பட்டதால் ஜன.17ஆம் தேதியன்று வேறு விமானத்தில் துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.