கரோனா தொற்றின் 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா தொற்று தீவிரத்தை உணராத பொதுமக்கள் பலர் வெளியே வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் பொது மக்கள் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று (மே.18) முதல் காவல் துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களிடம் விசாரிக்கும் காவல்துறை! சென்னையில் 13 வாகன தணிக்கை சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 மணிக்கு மேல் வாகனங்களில் வருபவர்களிடம் காவல் துறையினர் இ-பதிவு உள்ளதா என விசாரிக்கின்றனர். அப்படி இல்லை என்றால் அபராதம் விதித்தல், வழக்குப்பதிவு செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
நேற்று(மே.18) மட்டும் விதிகளை மீறி சாலைகளில் பயணித்தவர்கள் மீது 3,315 வழக்குகள் பதியப்பட்டு 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்கள் மீது 3,044 வழக்குகள், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள் மீது 345 வழக்குகள் என, மொத்தம் 6,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இ-பதிவு குறித்த விளக்கமான அறிக்கை ஒன்றை சென்னை காவல்துறை வெளியிட்டது. இருப்பினும், பல்வேறு சாலைகளில் பொது மக்களை காண முடிகிறது. கடந்த முழு ஊரடங்கின் போது தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
ஆனால் இந்த முழு ஊரடங்கின் போது 50 விழுக்காடு பணியாளர்களுடன் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!