சென்னை:சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து போலீசார் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் 15 நாட்களில் மட்டும் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் பலியாகி உள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாமல் 18 பேர் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற பயணிகள் என்பது தெரியவந்தது.
இதனால் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் பின்இருக்கையில் செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் இந்த விதிமுறைகள் நேற்று (மே.23) முதல் நடைமுறைக்கு வந்தது.
குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட 315-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகன பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பயணிகளிடம் 100 ரூபாய் அபராத தொகையை வசூல் செய்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின் இருக்கை பயணிகள் மீது 2,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்து செல்லும் போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராத தொகையை வசூல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.