தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம் - தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

By

Published : Jan 24, 2022, 7:24 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலை தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய ஓய்வுபெற்ற இணை இயக்குநர் மருத்துவர் நக்கீரன், சென்னை மருத்துவ கல்லூரி பொது அறுவை சிகிச்சை நிறுவன ஓய்வு பெற்ற இயக்குநர் மருத்துவர் பாண்டியராஜ், முகமது அன்சு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(ஜன.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் நக்கீரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,"உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் வழங்கிய அவகாசம், ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், ஏற்கனவே நீதித்துறை நடவடிக்கைகளை மார்ச் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், மாநில நிலவரங்களின் அடிப்படையில் உயர்நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

மேலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்றாவது அலை தீவிரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தலைத் தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி உத்தரவிடலாம்" எனத் தெரிவித்தனர்.

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் எனவும் மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருப்பதால், தேர்தலை கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.

வழக்கில் வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு (ஜனவரி 25) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details