சென்னை:ஆக. 1 முதல் ஆக. 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் சரியாக கொடுக்காததால் என்னென்ன நோய்கள் எல்லாம் குழந்தைகளைத் தாக்க வாய்ப்புள்ளது? அதனைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனை இயக்குநர் விஜயாவிடம் எமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் யோகய்யப்பன் நடத்திய நேர்காணலைக் காண்போம்.
அவரிடம் முன் வைக்கப்பட்ட கேள்விகளும், பெறப்பட்ட பதில்களும் பின்வருமாறு:
'தாய்ப்பால் கொடுப்பதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது. அது குழந்தைக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி மூளை வளர்ச்சி, தாய், குழந்தை பிணைப்பு, குழந்தை உடல் ஆரோக்கியம் முதலியவை நன்றாக இருக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி கர்ப்பப்பை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும். பணிக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை வெளியில் எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் கிட்டத்தட்ட 1 நாள் நன்றாக இருக்கும்.
அதுமட்டுமின்றி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாய்ப்பால் தருவதற்கு என தனி அறை அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாய்ப்பால் தரவில்லையெனில், என்ன வகையான நோய்கள் வர வாய்ப்புள்ளன?
குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், தொடர் வயிற்றுப்போக்கு முதலியவை ஏற்படும். மேலும் மூளை வளர்ச்சி சரியாக இருக்காது. மற்ற குழந்தைகளை ஒப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்காத குழந்தை மந்தமாக இருக்கும் எனப் பல ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.