திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள ராவணபுரம், செல்லப்பம் பாளையம் உள்பட ஆறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாலாறு, நல்லாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசன வசதி பெற்றுவந்தன. பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பின், அதற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக, 1968ஆம் ஆண்டு, 49 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைத்து நல்லாறு ஆற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இதனால் தங்களுக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாகவும் கூறி, நல்லாறு – பாலாறு பாசன படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயில் இருந்து, நல்லாறுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், சுரங்க கால்வாய் அல்லது மேல்மட்டக் கால்வாய் கட்ட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, தொழில்நுட்ப ரீதியில் இந்த கால்வாய் கட்டுவது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தது.