தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக அடுத்தடுத்த தேர்தல்களில் ஒரு சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற இயலாமல் கட்சியின் பலத்தையும் செல்வாக்கையும் இழந்துள்ளது.
நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிக குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதில், விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 8.4 விழுக்காடாக இருந்தது. பிறகு நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. எனினும் கட்சியின் வாக்கு வங்கி 10.1 விழுக்காடாக அதிகரித்தது.
இதையடுத்து தேமுதிக, 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் களம்கண்டது. இதில், 21 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 7.9 விழுக்காடாக இருந்தது. முக்கிய திராவிட கட்சியான திமுகவைப் புறந்தள்ளி தேமுதிக இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது. மேலும், விஜயகாந்த் தலைமையில் 21 வேட்பாளர்களும் எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்து ஆளும் அதிமுகவுக்குச் சவால் கொடுத்தனர்.
பிறகு, அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான பாஜக தலைமையில் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்ற நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். தேமுதிக 5.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்தான் தேமுதிகவுக்கு ஒரு சாபமான தேர்தல். கூட்டணி அமைப்பதில் தேமுதிக நிர்வாகிகளிடையே குழப்பம் நிலவியது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தனது கட்சியில் இணையும் என்பதை மறைமுகமாக ஒரு பழமொழியின் மூலம் சொல்லியிருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்து 104 தொகுதிகளில் தேர்தலைச் சந்தித்தது. தேமுதிகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.