சென்னை:கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாமல்லபுரத்தில், கடந்த 2013ஆம் அண்டு பா.ம.க.வினர் நடத்திய சித்திரைத் திருவிழாவின் போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன.
பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜி.கே மணி 2014ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விசாரணையில் தலையிட மறுத்து, நோட்டீசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, "டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது, பேருந்துகள் ஓடாதது ஆகியவற்றால் வருவாய் இழப்பு எனக் கூறி அதிகார வரம்பு இல்லாமல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், பொதுச் சொத்து சேத தடுப்புச் சட்டப்படி குற்றமாக இருந்தால் தான் இழப்பீடு கோர முடியும் என்றும், ஆனாலும் இது தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
சொத்து சேதம் ஏதும் இல்லாத நிலையில், இழப்பு ஏற்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அந்த நோட்டீசும் கட்சிக்கு அனுப்பாமல், தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இது போல விளக்கம் கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸ் மீது நீதிமன்றம் தலையிடுவதில்லை எனக் குறிப்பிட்டு இந்த வழக்கைப் பொறுத்தவரை மதுக்கடைகளும், பேருந்துகளும் செயல்பட முடியவில்லை எனக் கூறி, இழப்பு ஏற்படுத்தியதாக கூறுவது குறித்து அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதேசமயம், வருவாய் இழப்பை பொதுச் சொத்து சேதமாகக் கருத முடியுமா? என்பதையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது மனுதாரர் தனது கூடுதல் பதிலை 15 நாட்களில் அளிக்க வேண்டுமெனவும், அதைச் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டும் நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:மதுரை மாநகராட்சியில் தனியார் வங்கி மூலமாக வரி வசூலிப்பு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்...