சென்னை, விருகம்பாக்கத்தில் கேமரா வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் சரவணகுமார். இவர் பல நிறுவனங்களில் காணொலி பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவரை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, மருத்துவ மாணவர் ஒருவருக்கு கேமரா தேவை எனக் கூறி நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதற்கு, விருகம்பாக்கத்தில் உள்ள தனது கடையில் ஊழியர் விஜய் என்பவர் இருப்பதாகவும், கடைக்குச் சென்று உரிய ஆவணங்களை ஒப்படைத்து வாடகைக்கு கேமரா வாங்கிக் கொள்ளுமாறும் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சரவணகுமாரின் கடைக்கு அம்மா, மகன் என்று கூறிக்கொண்டு சென்ற இருவர் வாடகைக்கு கேமரா கேட்டு, அங்கிருந்த ஊழியர் விஜய்யிடம் விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர். அப்போது மகன் வேடத்தில் சென்ற நபர், தான் ஒரு மருத்துவ மாணவன் எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்து, குறும்படம் எடுப்பதற்கு கேமரா வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரிடம் விஜய், குறிப்பிட்ட உயர் ரக கேமராவான கேனான் 5டி கேமராவையும் அதற்குண்டான லென்சையும் காண்பித்துள்ளார்.
இதையடுத்து பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆவணங்களைக் கொடுப்பது போன்று பாவனை காட்டி அந்த இருவரும் கடை ஊழியர் விஜய்யை திசைத் திருப்பி கேமராவை திருடிச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கேமரா திருட்டுபோனதை உணர்ந்து சரவணக்குமாரிடம் ஊழியர் விஜய் தகவல் தெரிவித்துள்ளார்.