தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்! - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்தும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Cabinet
முதலமைச்சர்

By

Published : May 1, 2023, 6:35 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முத்திரைத்தாள் திருத்த சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேரவையின் கடைசி நாளான கடந்த 21ஆம் தேதி, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் கடந்த 21ஆம் தேதி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த நில ஒருங்கிணைப்பு மசோதா மற்றும் 12 மணி நேர வேலை மசோதாவுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதில், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பையடுத்து 12 மணி நேர வேலை மசோதா இன்று திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (மே.2) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து ஆலோசித்து அவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெற்றதற்கு தொ.மு.ச வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details