சென்னை :2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் 5ஆம் தேதிதொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
பின்னர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, நிதிநிலை தாக்கல் செய்த மறுநாள் அதாவது மார்ச் 19ஆம் தேதி வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.