குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வராகி, வழக்கறிஞர் கோபிநாத், கண்ணன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சேலத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தை எதிர்த்து கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், காவல் துறை அனுமதியில்லாமல் தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் போராடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுதான் சரியாக இருக்கும் எனவும், இதுபோன்று நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமாகத்தான் கருத வேண்டும் எனவும் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறார் நீதிச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அதன்படி குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் காவல்துறையினர் இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தை ஒத்திவைத்த இஸ்லாமியர்கள்