சென்னை:கொண்டாடப்பட வேண்டிய முன் களப்பணியாளர்களை, வீதியில் போராடும் நிலைக்கு தள்ளியிருப்பது வேதனைக்குரியது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா பேரிடர் காலத்தில் தங்கள் குடும்பத்தை மறந்து, உயிரை துச்சமென மதித்து களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட போராடும் செவிலியர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, 'கை கழுவி விட்டது' இந்த அரசு. மனம் தளராமல் உயர் நீதிமன்றம் சென்று முறையிட்டு, 'பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு 6 வாரத்துக்குள் அரசுப் பணி நியமன ஆணை வழங்க வேண்டுமென்ற' உத்தரவினை பெற்று வந்தார்கள்.
ஆனால், இந்த நிமிடம் வரை அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது வருத்தம் அளிக்கிறது. எதிர்கட்சித் தலைவர், 'பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்ற அரசுக்கு துணை நின்ற செவிலியர்களை இனியும் போராட வைக்காமல், திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 356 "ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.
இப்போது, கைக்குழந்தைகளுடன் செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இனியாவது அரசு மனம் இறங்கி, கரோனா கால செவிலியர்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக ஏற்று, அவர்களை பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடப்பட வேண்டிய முன் களப்பணியாளர்களை, வீதியில் போராடும் நிலைக்கு தள்ளியிருப்பது வேதனைக்குரியது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சீமான் தொடர்ந்த வழக்கு! நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!