மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18ஆம் தேதி 18 தொகுதிகளுக்கும், மே 19ஆம் தேதி மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டு மணிக்கு வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
நாடே மக்களவைத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தாலும் தமிழ்நாடு மக்கள் இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும். இச்சூழலில் அதிமுக தற்போது 113 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக 97 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது.
இந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில், அதிமுக ஐந்து தொகுதிகளில் வென்றால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். இருப்பினும், ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரின் நிலைப்பாடு என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால் அவர்கள் அநேகமாக அதிமுகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருப்பர் என கூறப்படுகிறது.