சென்னைவிமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து, திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்துக்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (50) என்பவர் இந்த விமானத்தில் திருச்சி செல்ல வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய உடமைகளை பரிசோதித்தனர். அவருடைய ஒரு பையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பையை தனியே எடுத்து வைத்தனர்.
அதோடு பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் பயணி அந்தப் பையில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை திறந்து பார்த்து சோதித்தபோது அந்தப் பைக்குள் 7 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.