தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்து, மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், ”செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
பம்பர் டூ பம்பர் காப்பீடு வழக்கு ஒத்திவைப்பு - bumper to bumper insurance
10:25 September 02
புதிய வாகனத்திற்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொது காப்பீட்டு மன்றம் (GIC) சார்பில் நேற்று (செப் 1) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதேநேரத்தில், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.
எனவே ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செப் 2) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், ”பொதுக் காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து” உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.