சென்னை மண்ணடி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால், தொலைத்தொடர்பு கருவிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் சென்னையில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாத நிலையில் உள்ளது.
செயலிழந்து கிடக்கும் காவல்நிலைய லேண்ட்லைன்கள்; புகாரளிக்க முடியாத பொதுமக்கள் தவிப்பு! - BSNL fire
சென்னை: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேண்ட்லைன் இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாததோடு, முக்கிய காவல் நிலையங்களிலும் தொலைத்தொடர்புகள் செயல்படாத நிலையில் இருப்பது மக்களை பெரும் இன்னலில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பிஎஸ்என்எல் அலுவலர்கள் சார்பில் நேற்று 20 ஆயிரம் இணைப்புகாள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், பூக்கடை, மாதவரம், புளியந்தோப்பு, அண்ணா நகர், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் புகாரளிக்க முயற்சி செய்யும் பொதுமக்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100 எண் மட்டும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.