சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த பணியாளர் சங்கம், தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை 60 கோடி ரூபாயில் 25 விழுக்காடான 15 கோடி ரூபாயை இந்த வழக்குகளுக்காக உருவாக்கப்பட்ட கணக்கில் செலுத்தப்பட்டதாக பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீண்ட நாட்களாக ஊதியம் முறையாக வழங்கப்படாதது மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதை கருத்தில் கொண்டு 15 கோடி ரூபாயை, 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க தொழிலாளர் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை விட நிலுவை ஊதியம் குறைவாக இருந்தால் அதை மட்டும் வழங்கினால் போதும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.