சென்னை:தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்ட வழக்கில் பழைய குற்றவாளியான ஒருவர் கைது செய்யப்பட்டார். ஐந்தே நாட்களில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், டேக்ஸ் கன்சல்டன்சி நடத்திவருகிறார்.
கடந்த வாரம் தனது தாயாரை காண்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 92 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரை அடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில், உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைபற்றி பார்த்தபோது தனி நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையில் அந்த நபர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா எனத் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் குண்டுமேடு பகுதியில் பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்து, அவரிடமிருந்து 62 சவரன் தங்க நகைகள், இரண்டு சொகுசு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் தங்க நகைகள் கொள்ளை - ஒருவர் கைது மேலும் விசாரணையில் சூர்யா மீது தாம்பரம், நொளம்பூர், மடிப்பாக்கம்,
திருமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகள் என 12-ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழு பழங்கால உலோகச்சிலைகள் மீட்பு!