சென்னை:சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் தொல்லைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தலா 5 பணியாளர்கள் கொண்ட 16 குழுவினர் சென்னை மாநகராட்சி முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநகராட்சி குழுவினரால் பிடிக்கப்படும் நாய்களுக்கு புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை மற்றும் ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களில் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர் மீண்டும் பிடித்த இடத்திலேயே அந்த தெருநாய்கள் விடப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தொல்லை கொடுத்து வந்த 297 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவற்றில் 268 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (மார்ச் 4) மட்டும் 57 நாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யப்பட்டு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 38 நாய்களும், வளசரவாக்கத்தில் 24 நாய்களும், அடையாறில் 23 நாய்களும் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், தெருநாய்கள் தொல்லைகள் குறித்து 1913 என்ற எண்ணில் மாநகராட்சியிடம் புகார் அளிக்கலாம் எனவும், இவ்வாறு பெறப்படும் தகவலின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இனக்கட்டுப்பாட்டு சிறப்பு சிகிச்சை மையம் மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் தயாராகி வருகிறது. முன்னதாக நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் பேசிய 137வது வார்டு கவுன்சிலர் கே.தனசேகரன், சென்னையில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதேநேரம் அடுத்த மாதம் வரவிருக்கும் மாநகராட்சி பட்ஜெட்டில், தெருநாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கருத்தடை குறித்த உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெருநாய்களை உயிரிழக்கச் செய்யலாம்.
ஆனால், 2001ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில், அரசால் பிடிக்கப்படும் தெருநாய்களை உயிரிழக்கச் செய்ய முடியாது. இருப்பினும், பிடிபட்ட நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, பிடித்த இடத்திலேயே நாய்களை விட வேண்டும் என இந்த சட்டத் திருத்தம் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Video: தெருநாய்கள் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி!