சென்னை:தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால், இளம் பெண்கள் உட்பட பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. முன்பு 1 லட்சம் பேரில் 16 பேர் என்ற நிலையில் இருந்து உயர்ந்து, தற்போது 1 லட்சம் பேரில் 25 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது என சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தற்பொழுது அதிகளவில் புற்றுநோய் பெண்களுக்கு கண்டறியப்படுகிறது.
குறிப்பாக, முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிக அளவில் கண்டறியப்படுகிறது. மார்பக புற்றுநோய், பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும். இந்தியாவை பொறுத்தவரையில், 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொள்கையில், அதில் 25 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
10 வருடங்களுக்கு முன்னாள், 1 லட்சம் பெண்களில் 16 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது மார்பக புற்றுநோய் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால், அதில் 37 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரத் தொடங்கும். 60 வயதுக்கு மேல், 8 பேரில் 1 பெண்ணுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அதிகளவில் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
இதனால் ஆரம்ப நிலையிலேயே இந்த மார்பக புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மேமோகிராம் பரிசோதனை ஆண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.