சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை குறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழகத்தின் தென் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கெடுத்து நகரத்தில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் களத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து பகுதியிலும் மோடி கிச்சன் திறக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளேன்.
மழை கடந்த பிறகும் நிவாரண உதவி செய்ய அரசுடன் பா.ஜ.க. களத்தில் நிற்கும். இது வரலாறு காணாத மழை. முப்படை உதவியை தலைமை செயலாளர் கோரி உள்ளார். சூலூரில் இருந்து இந்திய விமானப்படை உணவு வழங்க கோரி உள்ளனர். மக்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்ய பா.ஜ.க. தயாராக இருக்கிறது. கடலுக்கு செல்ல கூடிய மீனவர்கள் அரசு என்ன சொல்லி இருக்கிறதோ அதை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.