வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்டபொம்மனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை நேரடி வாரிசு வீமராஜா, இல. கணேசன், வி.பி. துரைசாமி, நரேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது மறைந்த பாடகர் எஸ்.பி.பி., அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு பாதிப்படையும் என்று சிலர் தவறாக பேசிவருகின்றனர். இட ஒதுக்கீடு அரசியல் சாசனம் வழங்கும் உரிமை. இதனால் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாகச் செயல்படும் வேளையில், அரசின் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். சூரப்பாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியில்லை. ஆளுநருக்குக் கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தராக சூரப்பாவுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதை அவர் பயன்படுத்திவருகிறார். துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை.