சென்னை :சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தொடர்பான பிரச்னையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தாக்கியதாக தி கம்யூன் என்ற ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சிதம்பரம் பகுதியில் பலரும் உண்மையாக நடந்தது என நம்பி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டடுள்ளதாகவும், இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் இந்த பதிவானது போடப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்கும் வகையில் சிதம்பரத்தின் கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி சிதம்பரம் நகர காவல் நிலைய காவல் துறையினர், நான்கு பிரிவுகளின் கீழ் ‘தி கம்யூன்’ ஏன்ற ட்விட்டர் பக்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையின் அடிப்படையில் பாஜக மாநில செயலாளரான எஸ்ஜி சூர்யாவை விசாரிப்பதற்காக சிதம்பரம் நகர காவல் நிலைய காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. வருகிற ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை சு.வெங்கடேசன் எம்பி குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்” என பதிவிட்டிருந்தார்.