சென்னை: டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தேசிய மாநாடு இணையம் வழியாக நடைபெற்றது. இதில் தேசிய அளவில் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்களும், தமிழகத்தில் இருந்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமைந்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேசியக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்தப்பட்டது. நேற்று(ஏப்ரல் 3) நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் மிகமுக்கியமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய போது, "சாதியால் ஒடுக்கப்பட்டவர்களை, சாதியை வைத்தே உயர்த்துவதற்கு பெயர் தான் சமூகநீதி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், அது பொருளாதார நீதி ஆகுமே தவிர, சமூகநீதி ஆகாது. கர்நாடகாவில் தேர்தல் அரசியலுக்காக முஸ்லீம்களுக்கு இருந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்தியிலும், மாநிலத்திலும் எடுக்க வேண்டும். சமூக நீதிக்காக ஒத்த கருத்துடைய அனைவரும் 2024-ல் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையே கருத்தியியல் ரீதியிலான பலம். அதற்காக சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த மாநாடு அடித்தளமாக அமைந்துள்ளது" எனக் கூறினார். சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக முதலமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டது போல பேசி வருகிறார். சமூக நீதிக் கூட்டமைப்பை முன்னிறுத்தும் அவரது முயற்சியும் நேற்று (ஏப்ரல் 3) அவர் ஆற்றிய உரையும் அப்படித்தான் பிரதிபலித்தன. 1967-ல் அவரது சித்தாந்த வழிகாட்டியான அறிஞர் அண்ணா விரும்பிய EWS இடஒதுக்கீட்டை அவர் விரும்பவில்லை. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு எஸ்.சிக்கான இடஒதுக்கீட்டை 15% லிருந்து 17% ஆகவும், STக்கான இட ஒதுக்கீட்டை 3% லிருந்து 7%ஆகவும் உயர்த்தி சமூக நீதியை நிரூபித்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
EWS-ஐ கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசும், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசும் மற்றும் பீகாரிலும் JD(U) அரசும் செயல்படுத்தியது. இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் EWS-ஐ செயல்படுத்திவிட்டு நேற்றைய நிகழ்வில் அதற்கு எதிராக எதிரொலித்தது நகைச்சுவையாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் துயரங்களையும், சமூக நீதியில் அதன் தாக்கத்தையும் மறந்துவிட்டாரா? அரசுத் துறையில் வாக்குறுதியளிக்கப்பட்ட 3.5 லட்சம் வேலைகள் எங்கே?
கடந்த 2 ஆண்டுகளில் எஸ்.சி துணைத் திட்டத்தில் 12,884 கோடி ரூபாய்க்கு மேல் ஏன் தமிழக அரசு செலவிடாமல் உள்ளது? மாநில அரசுத் துறைகளில் SC/ST பிரிவினருக்கான 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. அவற்றை எப்போது நிரப்பத் திட்டமிட்டுள்ளீர்கள்? எஸ்.சி/எஸ்.டிக்கான 33 திட்டங்களில் 13 கடந்த ஆண்டு உங்கள் அரசால் நிறைவேற்றப்படாமல் இருந்தது ஏன் என்று விவாதித்தீர்களா?
எஸ்.சி சகோதர, சகோதரிகள் திமுக செயல்பாட்டாளர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் அனுமதிக்கப்படவில்லை. குடிநீரில் மனித மலம் கலந்து 3 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால் வேங்கைவயல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எப்போது எழுவீர்கள்? மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் சித்தாந்த ஆலோசகர் கி.வீரமணி குறைந்தபட்சம் வேங்கைவயலுக்கு வருகை தந்தாரா? நாம் இங்கு என்ன சமூக நீதியை போதிக்கிறோம்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு